Friday, July 8, 2011

புக்கிட் திங்கி (Bukit Tingi)

                       

                       சென்ற வருடம் மலேசியா சென்றவுடனே இரண்டாம் வருடம் தொடங்கும் முன்னர் சென்ற ஒரு நாள் வெளியிட பயணம். எனது நண்பனுக்கு அன்று பிறந்த தினம். முதல் நாளே புக்கிட் திங்கி போவதாக முடிவாகிவிட்டது. எனது நண்பனிடம் ஒரு கார் இருந்தமையால் அதிகாலை எழுந்து பிரயாண ஏற்பாடுகளை கவனிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. ஆனாலும் கொஞ்சம் காலைப்பொழுதே எழுந்து விடுவது தான் முடிவு. எங்களுடன் படிக்கும் வேறு சில நண்பர்களும் எங்களுடன் வருவதாக இருந்தது. காலை 8 மணிக்கு (அது வழமைக்கு மாறு தான், வழக்கமாக பகல் ஒரு மணிக்கு தான் எங்களுக்கு காலை விடியும்), எழுந்து கைபேசியை பார்த்தால் எங்களுடன் வருவதாக இருந்த மற்ற நண்பர்கள் தங்களால் வரமுடியாது என்று குறுங்செய்தி போட்டு இருந்தனர். பார்த்த உடனே எனது நண்பனின் அறைக்கதவை தட்டினேன். விசயத்தை சொன்னேன் எங்களுடன் வருவதுக்கு வேறு யாரவது அந்த நேரம் எழுந்துவிட்டார்களா என்று பார்த்தோம் ஒருவனை தவிர அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். சரி என்று அந்த நண்பனை ஒரு மணி நேரத்தில் வெளிக்கிட சொல்லி நாங்களும் வெளிக்கிட்டம்.

                        9 மணி போல பிரயாணம் ஆரம்பித்தது. மலேசியாவில் சாலை வசதிகள் மிகவும் நல்ல முறையில் இருப்பது எங்கள் பயணத்தை இலகுவாக்கியது. புக்கிட் திங்கி பெரும்பாலும் அனைவரும் அறிந்த கமரூன் ஹைலண்ட்ஸ் செல்லும் சாலையில் அதையும் தாண்டி செல்ல வேண்டும். எனது நண்பன் தனது சீன நண்பன் ஒருவன் மூலம் அந்த இடத்தைப்பற்றி அறிந்திருந்தான். அங்கு போகும் முதன் அங்கு இருக்கும் கட்டிடங்கள் ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டு இருக்கும் என்று மட்டும் கேள்விபட்டது மட்டும்தான்.



                       புக்கிட் திங்கியை அடைந்ததும் அங்கு ஒரு வரவேற்ப்பு பலகை அங்கு உள்ள இடங்களை காண்பித்தது.


                        அங்கு முயல் பண்ணை, கோல்ப் விளையாடுத்திடல், குதிரை லாயம், பிரெஞ்சு கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள், ஜப்பானிய கட்டிட கலையில் அமைந்த கட்டிடங்கள் மற்றும் தாவரவியல் பூங்கா என்று பல இருந்தன. நாங்கள் எல்லாவற்றையும் பார்க்க நேரம் கிடைக்குமோ என்று எண்ணினோம். எனவே பார்ப்பதற்கு எல்லோருக்கும் பிடித்த இடங்களை தெரிவு செய்தோம்.

                         முதலில் முயல் பண்ணை நோக்கி எமது பயணம் அமைந்தது. பார்க்கும் போது மனதுக்கு இரம்மியமாய் இருந்தது. மென்மையான பிராணிகள் குளிர்மையான காலநிலை உங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச்செல்லும்.





                         மேலும் பிரெஞ்சுக்கட்டிடக்கலையில் அமைந்த கோட்டைகள் கொத்தளங்கள் என சுற்றுல்லா பயணிகளை கவரும் இடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 










                         மேலே உள்ள இடத்தை பார்த்த பிறகுதான் மஜ்னு படத்தில் நான் ஐரோப்பிய நாட்டில் எடுத்த என்று எண்ணிய "குல்முஹர் மலரே" பாடல் உண்மையில் இங்குதான் படமாக்கப்பட்டது என்று புரிந்தது. சந்தேகம் இருந்தால் கீழுள்ள வீடியோவை பாருங்கள்.




                          அதையும் தாண்டி போகும் போது ஜப்பானிய முறையில் இயங்கும் ஒரு சிறிய தேனீர்ச்சாலை உண்டு. ஆனால் அது ஒரு மலை சரிவில் இருக்கிறது. நடந்துதான் போக வேண்டும். அங்கு சென்றால் சிறிய ஜப்பானிய முறையில் மரத்தாலான வீடுகளை காணலாம். அருவியின் கரையில் அமைக்கப்பட்ட வீடுகள் மிகவும் குளிர்மையாக இருந்தன. அங்கேயே படுத்து சிறிது நேரம் தூங்கவும் செய்தோம். 




                         மேலும் போனால் அங்கு தாவரவியல் பூங்கா, ஹெல்த் கேர் ஸ்பா என்பன உண்டு. கையில் கேமரா இல்லை. கைபேசியில் சுட்ட படங்கள் தான் அவை. கைபேசியில் பட்டரி இல்லாமல் அணைந்துவிட்டது. எனவே மேற்பட்டஇடங்களின் படங்களை தர முடியவில்லை. காலை தொடங்கிய பயணம் மீண்டும் வீடு திரும்ப இரவு மணி 10 ஐ தாண்டி இருந்தது. 

                         கோலாலம்பூரிலிருந்து ஒரு நாளில் சென்று திரும்பக்கூடிய இடம். வேகமாக நகரும் வாழ்கையின் வேகைத்தை குறைக்க வேண்டும் என்றால் சென்று வரலாம். மலேசியா போகும் போது நேரம் கிடைத்தால் போய் பாருங்கள்.


4 comments:

Mohamed Faaique said...

நல்ல பதிவு.. போட்டோக்களும் அலைபேசியில் எடுத்தது என்று சொல்ல முடியாத படி நன்றாக இருக்கு....

remove the Word Varification

அசால்ட் ஆறுமுகம் said...

@Mohamed Faaique

வருகைக்கு நன்றி. Nokia x6. 5 MPix. அதுதான் படங்கள் தெளிவாக உள்ளது.
word verification நீக்கப்பட்டது.

Jeenthan said...

என்னடா அங்க போய் இடங்கள பாக்காம முயல்கள் லவ் பண்ணறதஎல்லோ படம் எடுத்திருக்க... அதுகள கூட விட்டு வக்கிர இல்ல... என்ன புலப்பட இது...:P

அசால்ட் ஆறுமுகம் said...

இடங்கள தான் பார்த்தன்.. நான் என்ன செய்யுறது... முயலுகள் அங்க இருந்ததுக்கு?